×

தெளிவு பெறுஓம்: துளசி மாடம் எங்கே வைப்பது? எப்படிப் பராமரிப்பது?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தெளிவு பெறுஓம்

துளசி மாடம் எங்கே வைப்பது? எப்படிப் பராமரிப்பது?
– காயத்ரி, ராஜபாளையம்.

பதில்: ஒருவர் வீட்டில் துளசி மாடம் இருந்து அதற்கு விளக்கேற்றி தவறாமல் காலை மாலை துளசி பூஜை செய்து, துளசி மாடத்தை வலம் வந்தால் அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி விடுகின்றன. மனதில் உற்சாகம் பிறக்கும். செயல் வேகம் பெறும். எதிலும் வெற்றி கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பகவானுக்கு மற்ற எல்லா மணம் மிக்க மலர்களைவிட துளசி என்பது இஷ்டமானது. ஒரு துளசிச் செடியை பார்த்தால், தன்னோடு வருகின்ற மகாலட்சுமி தாயாரைகூடமறந்துவிட்டு துளசித் தாயாரையே பார்த்து க் கொண்டு பகவான் நிற்பான்.

சில மரங்கள் எல்லாம் பூத்து மலர்ந்து பிறகுதான் மணம் வீசும். ஆனால், துளசிச் செடி சிறு செடியாக இருந்தாலும் அதனுடைய கிளையும் அதனுடைய பேரும்கூட மணம் மிக்கதாக இருக்கும். அப்படிப்பட்ட துளசியை மாடம் கட்டி அதை வழிபாட்டுக்குரியதாக பராமரிப்பார்கள். துளசி மாடத்தை பெரும்பாலும் ஈசானிய திசையில் வடகிழக்கில் வைப்பது வழக்கம். அப்படி அமையாவிட்டால் வீட்டின் முற்றத்திலோ மற்ற தோஷம் இல்லாத இடத்தில குறிப்பாக கழிவறைக்கு பக்கத்தில் இல்லாமல் வைத்து பராமரிக்கலாம்.

? கடன் தீர எந்த கோயிலுக்கு போக வேண்டும்?
– பூபதி, உசிலம்பட்டி.

பதில்: கோயிலுக்குப் போவது இருக்கட்டும். அதற்கு முன் ஏதாவது வேலைக்குப் போக வேண்டும். சில வருடங்களுக்கு முன் நடந்தது. ஒருவருக்கு கடை வியாபாரம் சரியாக ஆகவில்லை என்று வருத்தம்.“ஒரு ஹோமம் செய்தால் சரியாகுமா?” என்று நண்பரிடம் யோசனை கேட்டார். நண்பர் “சரியாகாது” என்றார்.“என்ன இப்படி பேசுகிறீர்கள்.? ஹோமத்துக்கு சக்தியில்லையா?” என்று கேட்டார்.

“சக்தியெல்லாம் இருக்கிறது. ஆனால், நீங்கள் நேரத்துக்கு கடையைத் திறந்து உட்கார்ந்து வியாபாரம் செய்ய வேண்டுமே. பாதி நாள் கடை மூடி இருக்கிறது. திறக்கும் நாளிலும் நீங்கள் உட்காருவதில்லை. பிறகு எப்படி நடக்கும்? முயற்சி, கவனம், உழைப்பு இவற்றோடுதான் தெய்வ பலம் சேரும். சர்க்கரை மாத்திரை போட்டுக் கொண்டுகூட ரெண்டு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவது போலத்தான் நீங்கள் ஹோமம் செய்வது” என்றார்.

இதையெல்லாம் தாண்டி கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருச்சேறை எனும் தலத்தில் அருளும் ரிணவிமோசனலிங்கேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.

? எல்லா கிரக தோஷங்களும் நிவர்த்தியாக தினசரி வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்?
– பாண்டியன், வேளச்சேரி.

பதில்: பொதுவாக கிரக தோஷங்கள் என்பது நம்முடைய வினையினால் வருவது. நாம் ஏதாவது ஒரு தேவையற்ற பொருளைச் சாப்பிட்டால் நம்முடைய வயிறு கெடுவதைப்போல, நாம் செய்த தீவினை நம்மை பாதிக்கிறது. அதைத்தான் கிரக தோஷங்கள் என்று சொல்லுகின்றோம். சாப்பிடகூடாத ஒரு பொருளைச் சாப்பிட்டு நமக்கு வயிறு வலி வருகிறது. மழையில் நனைந்து ஜலதோஷம், ஜுரம் வருகிறது.

இப்போது என்ன செய்ய வேண்டும்? முதலில் மறுபடியும் நாம் மழையில் போகாமல் இருக்க வேண்டும் அல்லது தேவையற்ற பொருட்களைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இது முதல் படி. பிறகு வந்த வலிக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். வைத்தியம் பார்க்காமல் அப்படியே விட்டாலும், நாம் மேற்கொண்டு கெடுத்துக் கொள்ளவில்லையென்றால்சரியாகிவிடும்.

அது போலவே ஏதோ ஒரு வினையினாலே நமக்கு கிரக தோஷங்கள் வந்து நம்மைப் பாடாய்ப் படுத்துகின்றது என்று சொன்னால், எக்காரணத்தை முன் னிட்டும் நாம் எந்தச் தீய செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இது மிக முக்கியமானது. இரண்டாவதாக வழிபாடு. அதற்கு ஆன்றோர்கள் சில முறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக நவகிரக காயத்ரி மந்திரத்தைச் சொல்லலாம். இவற்றை சொல்வதால் தோஷங்கள் விலகும். நவகிரக காயத்ரி மந்திரங்கள் எல்லாப் பஞ்சாங்கங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பாராயணம் செய்வதன் மூலமாக பலன் பெறலாம். ஆனால், எந்த நவகிரக மந்திரங்களாக இருந்தாலும் பிரதான தெய்வத்தின் மந்திரம் முக்கியம். நமது இஷ்ட தெய்வம், குலதெய்வத்தின் மந்திரத்தைச் சொல்லித்தான் நவகிரக மந்திரம் சொல்ல வேண்டும். ஆலயங்களில் வழிபாடு செய்யும் பொழுதும், முதலில் நாம் பிரதான தெய்வத்தை வணங்கிவிட்டுத் தான் நவகிரகங்களுக்கு வர வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

? ராகு – கேது தோஷ நிவர்த்திக்கு என்ன பரிகாரம்?
– ராமநாதன், புதுக்கோட்டை.

பதில்: ராகு, கேது என்பது நிழல் கிரகங்கள். நிழல் என்பது நம்முடன் கூடவே பிரயாணப்படுவது. சில நேரத்திலே அது வெளிப்படையாக இருக்கும். சில நேரத்திலே அது வெளிப்படையாக இருக்காது. நம்முடைய வினைகளின் தாக்கத்தை மறைமுகமாக கொடுப்பது இந்த நிழல் கிரகங்கள். இதனை சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லுவார்கள். இது காரிய தடைகளையும், சுபத் தடைகளையும், குடும்ப விருத்தித் தடைகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக, புத்திர பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கேன்சர் போன்ற தீர்க்க முடியாத வியாதிகள் வருவது, எந்த வியாதி என்று கண்டுபிடிக்க முடியாத சில உடல் அவஸ்தைகள், இவைகளுக்கெல்லாம் ராகுவும் – கேதுவும் காரணம்.

இந்த தோஷ நிவர்த்திக்கு வெள்ளிக்கிழமை காலத்தில் ராகுவின் அதிதேவதையான துர்க்கையை வணங்குவது சாலச் சிறந்த பரிகாரமாக பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். வெள்ளிக்கிழமை தவறினால், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் இந்த வழிபாட்டைச் செய்யலாம். ராகு காலம் என்பது இந்த வழிபாட்டுக்கு உரியதுதான். அப்பொழுது வேறு சுபகாரியங்களை நாம் செய்வது கிடையாது.

ராகுவுக்கு பிடித்தமான மந்தாரை மலர்களை சாற்ற வேண்டும். அர்ச்சனை செய்ய வேண்டும். உளுந்து கலந்த அன்னத்தை நிவேதனம் செய்ய வேண்டும். ராகுவின் காயத்ரி மந்திரத்தை 27 முறை மனம் உருகிப் பாராயணம் செய்ய வேண்டும். இதன் மூலமாக ராகு தோஷ நிவர்த்தியாகும். சுபகாரியங்கள் நடக்கும்.

? குழந்தைகள் கல்வி அறிவு பெற என்ன ஸ்லோகம் சொல்லலாம்? எந்த தெய்வத்தை வணங்கலாம்?
– மணிமாறன், கோவை

பதில்: பொதுவாகவே எந்த தெய்வத்தை வணங்கினாலும் முறையான வழிபாடு செய்தாலும் கல்வி விருத்தி வரும். இருந்தாலும், சாஸ்திரத்தில் சில தெய்வ வடிவங்களை கல்விக்காகவும், சில தெய்வ வடிவங்களை செல்வம் பெறுவதற்காகவும் அமைத்துத் தந்திருக்கிறார்கள். கல்வி விருத்திக்கும் கல்வியால் வரக்கூடிய ஞானவிருத்திக்கும் கலை மகளாகிய சரஸ்வதி தேவியையும், தட்சிணாமூர்த்தி பெருமானையும், ஹயக்ரீவர் மூர்த்தியையும் வணங்க வேண்டும். ஹயக்ரீவர் கலைமகளுக்கு குரு என்பதால் ஹயக்ரீவ வழிபாடு சாலச் சிறந்தது. ஹயக்ரீவருக்கு உரிய கீழ்க்கண்ட சிறிய ஸ்லோகத்தை பதினாறு முறை தினம் பூஜை அறையில் பாராயணம் செய்ய குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதன் மூலமாக அவர்களுடைய அறிவு கூர்மையாகும். பாடங்களில் லயிப்பு ஏற்படும். மனதில் பாடங்கள் பதியும்.

ஞானா நந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

இதை காலை மாலை விளக்கேற்றி வைத்து பாராயணம் செய்வதன் மூலமாக 16 கலைகளும் வசப்படும். இது தவிர மகான்கள் சித்தி அடைந்த திருவரசு அல்லது பிருந்தாவனம் அல்லது ஜீவசமாதிகளுக்குச் சென்று விளக்கேற்றி, வலம் வந்து வணங்குவதன் மூலமாகவும் கல்வி விருத்தியாகும்.

? ஞாயிற்றுக்கிழமை திருமணம் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், சிலர் ஞாயிற்றுக்கிழமை சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று சொல்கின்றார்களே?

– கணபதி சுந்தர், திருப்பதி.

பதில்: உலகியல் விஷயங்களுக்காகச் சொல்லப்படும் சாஸ்திரங்கள் எல்லாம் காலதேசவர்த்தமானதிற்கு உட்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை என்பது எல்லோருக்கும் விடுமுறை நாளாக இருக்கிறது. அதனால் விசேஷத்தில் எல்லோரும் கலந்து கொள்ள முடியும்.பொதுவாகவே, ஒரு விஷயத்தை இரண்டு கோணத்தில் நாம் பார்க்க வேண்டும். சாஸ்திர ரீதியாகவும் பார்க்க வேண்டும். உலக வழக்கப்படி அல்லதுஅவர வர்கள் குடும்ப வழக்கப்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். சாஸ்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பது ஏற்புடையதாக இல்லை என்பது உண்மைதான். ஆனாலும், அனுஷ்டானத்தில் அது இருக்கிறது என்பதால் தவறில்லை.

பல விஷயங்கள் இப்படித்தான் இருக்கின்றன. நாம் செவ்வாய்க்கிழமையை ‘செவ்வாயோ வெறும்வாயோ’’ என்று ஒதுக்கி வைப்போம். ஆனால், செவ்வாய்க்கிழமை மங்கள வாரம் என்று சொல்லி சிலர் சுபகாரியங்களை நடத்துவது உண்டு. நாம் முற்பகலில் செய்யும் சில சடங்குகளை, பிற்பகலில் அல்லது மாலையில் செய்பவர்களும் உண்டு. ஆடி மாதம் முழுக்க சுபகாரியங்களை சிலர் விலக்குவார்கள். சிலர் ஆடி அமாவாசைக்கு பிறகு நல்ல நாளில் திருமணம் செய்வார்கள். காரணம் ஆடி அமாவாசைக்கு பிறகு சாந்திரமான முறைப்படி ஆவணி மாதம் பிறந்துவிட்டதாக கணக்கு. (சில நேரங்களில் ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம் ஆடியில் வரும் அல்லவா!)

அதைப் போலவே கரிநாள், தனிய நாள் இவற்றில் சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பார்கள். தமிழகத்தை தவிர இதர மாநிலங்களில் கரிநாள், தனிய நாள் ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அன்று சுபகாரியங்களைச் செய்கின்றார்கள். ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி மாத அமாவாசைக்கு பிறகு சுபமுகூர்த்தங்கள் செய்கிறார்கள். அன்று வேறு தோஷங்கள் இல்லாமல் இருந்து, சுப திதி யாகவும்,நட்சத்திரம் யோகம் நன்றாகவும் இருந்தால் சுபகாரியங்களைச் செய்யலாம்.

?சஷ்டியப்த பூர்த்தி என்பது 60-ஆம் ஆண்டின் துவக்கத்திலா? முடிவிலா? என்னென்ன சாந்திகள் ஒருவர் வாழ்நாளில் செய்ய வேண்டும்?
– வசுந்திரா, புதுச்சேரி.

பதில்: மனிதனுடைய வாழ்நாள் 100 வயது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. ‘‘சதமானம் பவதி’’ என்பது வேதவாக்கு. வேதசாஸ்த்ரத்தில் “தாயுர் வை புரு’’ (மனிதன் நூறு பிராயம் வாழ்பவன்) என்று கூறியுள்ளது.

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவ ரேலும்,
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு,
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே.
– என்பது தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம்.

இதில் சில சாந்திகள் நம்முடைய ஆன்மிக வளர்ச்சிக்கும் கிரகதோஷ நிவர்த்திக்கும் (அல்லது கட்டுப் படுவதற்கும்) ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வரிய அபிவிருத்திக்காகவும் செய்ய வேண்டும் என்று நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்கள்.சாந்தி என்பதுதான் சரியான வார்த்தை. நாம் அதை 60-ஆம் கல்யாணம், 80-ஆம் கல்யாணம் என்று நடைமுறையில் சொல்லுகின்றோம். கல்யாணம் போலவே மாங்கல்யதாரணத்தோடு நடத்துகின்றோம். அது தவறில்லை. கல்யாணம் என்பது திருமணத்தை மட்டும் குறிப்பது கிடையாது. மாங்கல்ய தாரணத்தை மட்டும் குறிப்பது கிடையாது. கல்யாணம் என்கின்ற சொல்லே மங்களச் சொல். நற்குணங்களையும் (கல்யாண குணங்கள்) நற்காரியங்களையும் குறிப்பிடுவது.

அதனால், அறுபதாம் கல்யாணம் என்பது தவறல்ல. ஆனால், அதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று சொன்னால் 60-ஆம் ஆண்டு முடிந்து, 61-ஆம் ஆண்டு துவக்கத்தில் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவர் பிறந்தபோது இருந்த அதே கிரக நிலைகள் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து நிற்கும்.சஷ்டி என்பது அறுபது. அப்தம் என்பது வயது. பூர்த்தி என்பது நிறைவு. இந்த மூன்றும் கலந்த வார்த்தை தான் `சஷ்டி அப்த பூர்த்தி’. பிறந்த குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுடன் அப்த பூர்த்தி என்று சொல்லி ஆயுஷ் ஹோமம் செய்வோம்.

பிறந்த மாதம் நட்சத்திரத்தை வைத்து அந்தந்த வயது பூர்த்தி அடைந்ததாக கருதி ஒரு கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கொள்வதோ, ஒரு ஹோமம் நடத்திக் கொள்வதோ சிறந்த விஷயமாகும். அது அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்.

ஆங்கில மாத பிறந்த நாளைத்தான் பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றார்கள். ஒரு வகையில் கொண்டாடிக் கொண்டாலும், பிறந்த மாதத்தையும் நட்சத்திரத் தையும்தான் பிறந்த நாளாகக் கருதி அன்று வைதீகமான வழிபாடுகளைச் செய்வது ஆத்ம லாபத்துக்குநல்லது. இன்னும் சில சாந்தி வைபவங்களையும் தெரிந்து கொள்வோம்.

60-வது வயது துவக்கத்தில் செய்ய வேண்டியது உக்கிர ரத சாந்தி
70-வது வயதில் செய்ய வேண்டியது பீமரத சாந்தி.
72-வது வயது நிறைவில் செய்ய வேண்டியது ரத சாந்தி.

80-வது வயதில் செய்ய வேண்டியது சதாபிஷேகம். (இதை எண்பதாவது வயதில் செய்வதில்லை. 80 வயது முடிந்து எட்டு மாதங்கள் கழித்துச் செய்வார்கள். அப்பொழுதுதான் ஆயிரம் பிறை கண்ட கணக்கு வரும்) 100 வயதில் செய்ய வேண்டியது சதமான வைபவம் என்று சொல்லப்படுகின்ற பூர்ணாபிஷேகம் (சொர்ண அபிஷேகம்) இதில் வைதீகமான காரியங்களும் உண்டு. லோகாயதமான அதாவது உலகியல் காரியங்களும் உண்டு. இரண்டும் இணைந்த விழாக்கள் என்பதால் உற்சாகத்துக்கு குறைவில்லை.

?வன்னி மரம் வீட்டில் வளர்க்கலாமா?
– அர்ஜுன்தாஸ், கரூர்.

பதில்: பொதுவாகவே சில மரங்களை வீட்டில் வளர்க்கச் சொல்வார்கள். சில மரங்களை வளர்க்க வேண்டாம் என்பார்கள். வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்: 1. அகத்தி மரம் 2. நாவல் மரம் 3. அத்தி மரம் 4. புளிய மரம் 5. கருவேல மரம் 6. வில்வ மரம் 7. அரச மரம் என இப்படி பல மரங்கள் உண்டு. வளர்க்க கூடாத மரங்களில் வன்னி மரமும் ஒன்று. வன்னி மரம் பெரும்பாலும் கோயில் நந்தவனங்களில் வளர்ப்பதுதான் சிறந்தது. ஆனால், வன்னி மரம் என்பது தெய்வீகமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த வன்னி மரத்தின் மரக்கட்டைகளை கடைந்துதான் ஹோமங்களுக்கு அக்னியை ஏற்படுத்துகின்றார்கள்.

? எதனால் பகவானிடமிருந்து விலகுகிறோம்?
– சத்தியன், திருச்சி.

பதில்: மாயையால் பகவனிடமிருந்து விலகுகிறோம். மாயை பந்தங்களை ஏற்படுத்துகின்றது. அந்த பந்தங்கள் பகவானைவிட்டு நம்மை விலக வைக்கிறது. இதைத்தான் பின்வரும் பாசுரத்தில் நம்மாழ்வார் விண்ணப்பித்தார். இந்த துன்பம் இனிவராமல் காக்க வேண்டும் என்றார். அழகான பாசுரம்.

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும்,
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே

இந்தப் பாசுரத்தை தினம் சொல்லுங்கள்.
பகவானின் பூரண அருள் கிடைக்கும்.

The post தெளிவு பெறுஓம்: துளசி மாடம் எங்கே வைப்பது? எப்படிப் பராமரிப்பது? appeared first on Dinakaran.

Tags : Clarity ,Saffron ,Basil ,Kayadri ,Rajapalayam ,Dinakaran ,
× RELATED தெளிவு பெறுவோம்